நாளை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும், தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக்கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் வரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும்.
அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்துள்ளனர்.
தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்றைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம்.
இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.
இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதிமுடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
No Response to "இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பு"
Post a Comment